கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் ஒவ்வொரு கால்இறுதியும் இரண்டு ஆட்டங்களை கொண்டது. இதில் பார்சிலோனா கிளப் (ஸ்பெயின்) பி.எஸ்.ஜி. எனப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) இடையிலான கால்இறுதியின் முதலாவது சுற்றில் பார்சிலோனா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் 2-வது கால்இறுதி சுற்று பார்சிலோனா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 29-வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் ரொனால்டு அராவ் ஜோ சிவப்பு அட்டை எச்சரிக்கைக்குள்ளாகி வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பி.எஸ்.ஜி. அணி அடுத்தடுத்து கோல்களை போட்டு 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பி.எஸ்.ஜி. நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வே இரண்டு கோல்கள் (61 மற்றும் 89-வது நிமிடம்) அடித்தார்.
இரண்டு கால்இறுதி சுற்றில் அடித்த கோல்களின் அடிப்படையில் பி.எஸ்.ஜி. 6-4 என்ற கோல் கணக்கில் முன்னிலையுடன் அரைஇறுதிக்கு முன்னேறியது. 2021-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதிக்கு வந்துள்ள பி.எஸ்.ஜி. அணி அடுத்து போரஸ்சியா டார்ட்மன்ட் (ஜெர்மனி) கிளப்பை சந்திக்கிறது.