ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை!

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு, தற்போது வரை உலகம் முழுவதும் 4 ,627 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் உயிர்ப்பலியை வாங்கியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 31 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

எனினும், பிரிட்டனுக்கு இந்த தடை பொருந்தாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டிரம்ப், கொவிட் -19 வைரசின் பிறப்பிடமான சீனாவில் இருந்து வரும் பயணிகளைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தவறியதால், அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள வாஷிங்டன், பிரான்சிஸ்கோவில் பொது நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் பொதுச் சுகாதார அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools