ஐரா- திரைப்பட விமர்சனம்
சர்ஜூன் இயக்கத்தில், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கொடப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில், நயன்தாரா, முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ஹாரர் படமான ‘ஐரா’ எப்படி என்பதை பார்ப்போம்.
பத்திரிகை ரிப்போர்ட்டரான நயன்தாராவுக்கு யூடியூப் சேனல் தொடங்கி, அதன் மூலம் பரபரப்பான செய்திகளை விஸ்சுவலாக காட்ட வேண்டும் என்று ஆசை. ஆனால், அவரது ஆசைக்கு பத்திரிகை நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கிறது. இதற்கிடையே, கல்யாணத்தில் விருப்பமில்லாத நயன்தாராவை அவரது பெற்றோர் திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்த அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகும் நயன்தாரா, கோயமுத்தூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுவிடுகிறார். அங்கிருந்து தான் நினைத்தது போல, யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, பேய்கள் பற்றிய வீடியோவை அப்லோட் செய்பவர், இல்லாத பேயை இருப்பதாக காட்டி வெளியிடும் வீடியோவால் பாப்புலராகிவிடுகிறார்.
இதற்கிடையே, நயன்தாராவை பின் தொடர்ந்து வரும் அமானுஷ்ய சக்தி ஒன்று, அவரையும் அவரது பாட்டியையும் கொலை செய்ய முயற்சிக்கிறது. அதே சமயம், சென்னையில் சிலர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும் மர்மமான மரணங்கள் அரங்கேற, அந்த மர்மத்தின் பின்னணியை அறிய கலையரசன் முயற்சிக்கும் போது, அதை செய்வது தனது காதலி பவானியின் ஆத்மா என்பதை அறிந்துக் கொள்வதோடு, அந்த ஆத்மா நயன்தாராவையும் கொலை செய்யும் முடிவில் இருப்பதையும் அறிந்துக் கொள்கிறார். மறுபுறம், தன்னை பயமுறுத்தி சித்ரவதை செய்யும் அமானுஷ்யம் பவானி என்பதை அறிந்துக் கொள்ளும் நயன்தாரா, அந்த பவானி யார் என்பதை அறிய முயற்சிக்கிறார். அதேபோல், பவானி கொலை செய்ய துடிக்கும் நயன்தாரா யார்? என்பதை அறிய கலையரசன் முயற்சிக்கிறார்.
ஒரு கட்டத்தில், கலையரசனை சந்தித்து பவானி யார்? என்பதை அறிந்துக் கொள்ளும் நயன்தாரா, தனக்கும் பவானிக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத போது, அவரது ஆத்மா ஏன் தன்னை பழி வாங்க துடிக்கிறது, என்று குழப்பமடைய, அதே குழப்பம் கலையரசனுக்கும் ஏற்படுகிறது.
இப்படி, எந்த விதத்திலும் ஒருவருக்கொருவர் சம்மந்தமில்லாத நிலையில், பவானியின் ஆத்மா நயன்தாராவை பழிவாங்க துடிப்பது ஏன்? என்பதை இதுவரை வெளியான பேய் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பேய் படமாக சொல்லப்பட்டிருப்பது தான் ‘ஐரா’ படத்தின் கதை.
பேய் படம் என்றாலே, ஒரு பங்களா அல்லது பழைய வீடு, அதில் ஒரு பேய், அந்த பேய்க்கு ஒரு பிளாஷ் பேக், அதில் அவரை யாரோ கொலை செய்ய, அவர் இறந்த பிறகு, தனது மரணத்திற்கு காரணமானவர்களை பழி வாங்குவது, இவை அனைத்தையும் அறிந்துக் கொள்ளும் ஹீரோயினோ அல்லது ஹீரோவோ, பழி வாங்க துடிக்கும் பேய்க்கு உதவி செய்வார்கள். இந்த பார்மட்டில் தான் பேய் படங்களின் கதை இருக்கும். இதில் சற்று வித்தியாசமாக, சில படங்களில் காமெடி தூக்கலாக இருக்கும், சில படங்களில் திகில் தூக்கலாக இருக்கும். ஆனால், கதையம்சம் மட்டும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால், ஐரா-வை பொருத்தவரை, கதையம்சத்திலும், பேயின் பழிவாங்கும் ஜானரிலும் பெரிய வித்தியாசத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் சர்ஜூன், மனிதாபிமானம் என்ற பொதுநலத்துடன் திரைக்கதையை வடிவமைத்து, அதை ஹாரார் ஜானரில் கொடுத்த விதம் முற்றிலும் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.
யமுனா மற்றும் பவானி என நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும், பவானி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவை காணமுடியவில்லை. பவானி என்ற பெண்ணாக மட்டுமே அவரை பார்க்க முடிகிறது. இதுவே அவரது கதாபாத்திரத்திற்கும், அதற்காக அவர் காட்டிய ஈடுபாட்டுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். யமுனா என்ற வேடத்தில் எப்போதும் போல சாதாரணமாக நயன்தாரா, தோன்றினாலும், பவானி என்ற வேடத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை காட்டியிருப்பவர், அந்த வேடத்தில் மூலம் தன்னால் எந்த வேடத்திலும் நடிப்பதோடு, அந்த வேடமாகவே மாற முடியும், என்பதை நிரூபித்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் வரும் யோகி பாபுவின் காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருந்தாலும், சொல்லும் அளவுக்கு பெரிதாக இல்லை. ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், குலபுல்லி லீலா ஆகியோர் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். கலையரசனுக்கு அழுத்தமான வேடம், அதை அழகாகவே கையாண்டிருக்கிறார். நயன்தாரா தான் கதையின் நாயகி என்றாலும், அவரது கதாபாத்திரம் மீதும் எதிர்ப்பார்ப்பு ஏற்படும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும், சுந்தரமூர்த்தியின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவாளர் தனது லைட்டிங் மூலம் ரசிகர்களை மிரள வைப்பது போல, சுந்தரமூர்த்தி தனது பின்னணி இசை மூலம் மிரள வைக்கிறார். அதேபோல், ”மேகதூதம்..” பாடலை திரும்ப திரும்ப கேட்க வைக்கிறார்.
இதுவும் பேய் பழிவாங்கும் கதை தான், என்றாலும் அதை இயக்குநர் சர்ஜூன் சொன்ன விதம் வித்தியாசமாக இருப்பதோடு, ஒரு பெரிய எமோஷ்னலோடும் சொல்லியிருக்கிறார். பேய் பிறரை பழி வாங்குகிறது என்றால், அவரால் நேரடியாக பாதிக்கப்பட்டு, அதனால் உயிரிழந்தவர்கள் பேயாக ரிவெஞ்ச் எடுப்பார்கள், ஆனால், சர்ஜூன் அமைத்திருக்கும் திரைக்கதையில், பவானி பழிவாங்கும் அனைவரும், அவருக்கு நேரடியாக எந்த கெடுதலும் செய்யாதவர்கள், அப்படி என்றால் மறைமுகமாக அவர்கள் பவானிக்கு செய்யும் தீங்கு என்ன? என்பதை இயக்குநர் சொல்லிய விதத்திற்காகவே இப்படத்தை பார்க்கலாம்.
அதே சமயம், படு பயங்கர திகிலோடு தொடங்கும் படம், அதன் பிறகு படு மெதுவாக நகர்வது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. அதே சமயம், என்ன நடந்திருக்கும் என்பதை ரசிகர்கள் யூகிக்க கூடாது, என்பதற்காகவே முதல் பாதி முழுவதையும் சஸ்பென்ஸாக இயக்குநர் நகர்த்தியிருந்தாலும், அதனாலேயே முதல்பாதி மெதுவாக நகர்கிறது.
பேய் படம் என்பதால், முழுக்க முழுக்க திகில் காட்சிகளையும், அமானுஷ்யங்கள் பற்றி மட்டும் பேசாமல், தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் அதை பயன்படுத்துபவர்கள் பற்றி இயக்குநர் விமர்சித்திருப்பது அவர்களுக்கான சவுக்கடியாக இருக்கிறது. அதே சமயம், வேலைக்கு செல்லும் பெண்களை தவறாக நினைக்கும் ஆண்களுக்கும் வசனத்தின் மூலம் சவுக்கடி கொடுத்திருக்கிறார்.
பவானி எதற்காக இத்தனை பேரை கொலை செய்கிறார், என்பதற்கான காரணத்தை இயக்குநர் கூறிய பிறகும், யமுனாவை பவானி பழிவாங்க நினைப்பது ஏன்? என்பதற்கான கேள்வி பத்தின் இறுதிவரை சஸ்பென்ஸை மெயிண்டெய்ன் பண்ணுவது, படத்தின் மீதான சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்கிறது. இறுதியில், யமுனாவை பவானி பழிவாங்குவதற்கான காரணத்தை சொல்லும் போது, மனிதத்தன்மையோடு நடந்துக் கொள்ள வேண்டும், என்ற பொதுநல கருத்தை படம் வலியுறுத்துகிறது.
நயன்தாரா மீது கோபமாக இருக்கும் பவானியின் ஆத்மா, ஏன் அவரது பாட்டியை கொல்ல வேண்டும்?, மற்றவர்களை கொலை செய்வதற்கு முன்பாக நயன்தாராவை ஏன் கொலை செய்யவில்லை?, மர்மமான முறையில் இறப்பவர்கள், பவானியால் கொலை செய்யப்படுகிறார்களா? என்று கலையரசன் எப்படி சந்தேகிக்கிறார், இப்படி பல கேள்விகள் படம் பார்ப்பவர்கள் மனதில் எழலாம், ஆனால், படத்தை நீங்கள் கொஞ்சம் உண்ணிப்பாக கவனித்தால், இந்த கேள்விகள் அனைத்திற்கும் இயக்குநர் படத்திலேயே பதில் சொல்லியிருப்பதையும் அறிந்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இயக்குநர் சர்ஜூன், திரைக்கதையை லாஜிக்கோடு கையாண்டிருக்கிறார்.
மொத்தத்தில், ‘ஐரா’ திகிலும், வித்தியாசமும் நிறைந்த ஹாரர் படம்.
-ஜெ.சுகுமார்