ஐபிஎல் 2024 சீசனில் நேற்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது.
பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் அடித்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
1. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும் (277-3).
2. பவுண்டரி மற்றும் சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டிகள் பட்டியலில் சிஎஸ்கே-ஆர்ஆர் போட்டியுடன் முதல் இடம் (69).
3. ஒரு இன்னிங்சில அதிக சிக்ஸ் அடித்ததில் மும்பை இந்தியன்ஸ் 20 உடன் 2-வது இடம். ஆர்சிபி 21 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளது. மேலும் ஆர்சிபி, டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் 20 சிக்ஸ் அடித்துள்ளன.
4. ஆண்களுக்கான டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டி இதுதான். இரண்டு அணிகளும் சேர்த்து 38 சிக்ஸ் அடித்துள்ளன.
5. ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டி இதுதான். இரண்டு அணிகளும் சேர்ந்த 38 சிக்ஸ் அடித்துள்ளன. இதற்கு முன்னதாக 2018-ல் ஆர்சிபி-சிஎஸ்கே அணிகள், 2020-ல் ஆர்ஆர்-சிஎஸ்கே அணிகள், 2023-ல் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் விளையாடிய போட்டிகளில் 33 சிக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது.
6. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மொத்தம் 523 (277+246) ரன் அடிக்கப்பட்டுள்ளது.
7. ஆண்கள் டி20 போட்டிகளில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ரன்னும் இதுவாகும். இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 517 ரன் அடிக்கப்பட்டிருந்தது.
8. ஐபிஎல் கிரிக்கெட்டில் 2-வது பேட்டிங் செய்த அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக 2020-ல் பஞ்சாப் அணிக்கெதிராக ஆர்ஆர் 226 ரன் அடித்து வெற்றி பெற்றுள்ளது.
9. மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் 6 பேட்ஸ்மேன்கள் தலா 20 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இவ்வாறு அடிப்பது இதுதான் முதல் முறையாகும்.
10. இரு அணிகளிலும் நான்கு பந்து வீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது இதுதான் முதல்முறை.
11. முதல் 10 ஓவரில் ஐதராபாத் அணி 148 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவரில் அதிக ரன் அடித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 141 ரன் அடித்து 2-வது இடத்தில் உள்ளது.