Tamilவிளையாட்டு

ஐபிஎல் 2024 – மும்பையை வீழ்த்தி லக்னோ வெற்றி

ஐபிஎல் தொடரின் நேற்றைய 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பூரன் 29 பந்தில் 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மும்பை அணி தரப்பில் சாவ்லா மற்றும் துஷாரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதனை தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. மந்தமாக விளையாடிய டெவால்ட் ப்ரீவிஸ் 20 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து அசத்தினார்.

அவர் 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பாண்ட்யா 16 ரன்னிலும் வதேரா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து இஷான் கிஷன் மற்றும் நமன் வெற்றிக்காக போராடினர். அதிரடியாக விளையாடிய நமன் அரை சதம் விளாசினார்.

இறுதியில் மும்பை அணியால் 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.