ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று முல்லாப்பூரில் நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
பஞ்சாப் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (டெல்லி, குஜராத் அணிக்கு எதிராக), 4 தோல்வி (பெங்களூரு, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளிடம்) தோல்வி கண்டுள்ளது. உள்ளூர் மைதானமான முல்லாப்பூரில் நடந்த முந்தைய 2 ஆட்டங்களில் அந்த அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.
பஞ்சாப் அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ஷிகர் தவான் தோள்பட்டை காயத்தால் ஓய்வில் இருக்கிறார். அவர் முழு உடல் தகுதியை எட்ட குறைந்தது ஒரு வாரம் பிடிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்திலும் ஆடமுடியாது. இது அந்த அணிக்கு பெரிய இழப்பாகும். கேப்டன் பொறுப்பை சாம் கர்ரன் கவனிப்பார்.
பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் ஷசாங்க் சிங், அஷூதோஷ் ஷர்மா அதிரடியாக செயல்பட்டு அசத்துகிறார்கள். ஆனால் பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா போதிய பங்களிப்பை அளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆல்-ரவுண்டர்கள் சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், ரபடா, ஹர்ஷல் பட்டேல் வலுசேர்க்கிறார்கள்.
5 முறை சாம்பியான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த மும்பை அணி அடுத்த 2 ஆட்டங்களில் (டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) வெற்றி பெற்றது. ஆனால் சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது. 207 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் (105 ரன்) அடித்த போதிலும், மற்ற வீரர்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.
பேட்டிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா நல்ல நிலையில் உள்ளனர். நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவின் வாணவேடிக்கை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடு மெச்சும் வகையில் இல்லை. பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவையே அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. ஜெரால்டு கோட்ஜீ, ஆகாஷ் மத்வால் உள்ளிட்ட பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீச வேண்டியது முக்கியமாகும். ரோகித் சர்மாவுக்கு இது 250-வது ஐ.பி.எல். போட்டியாகும். இதன் மூலம் டோனிக்கு (256 ஆட்டம்) அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டும் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெறுகிறார்.
தங்களது முந்தைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருக்கும் இவ்விரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றன. இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டத்தில் மும்பையும், 15 ஆட்டத்தில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். மேலும் இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் பந்து வீசி 2 ஸ்டெம்புகளை உடைத்தார். அந்த நேரத்தில் அது தொடர்பான வீடியோ, புகைப்படம் வைரலானது. அதற்கு இந்த போட்டியில் மும்பை அணி பழிதீர்க்குமா என மும்பை அணி ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: அதர்வா டெய்ட் அல்லது பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ஷசாங்க் சிங், லியாம் லிவிங்ஸ்டன், அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, அர்ஷ்தீப் சிங்.
மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, முகமது நபி, ஸ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்டு கோட்ஜீ.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.