Tamilவிளையாட்டு

ஐபிஎல் 2024 – சென்னையை வீழ்த்தி லக்னோ வெற்றி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ரகானே- ருதுராஜ் களமிறங்கினர். ரகானே முதல் ஓவரிலேயே 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 11 ரன்களிலும், ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து ருதுராஜ் – துபே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தினார். அதிரடி காட்டிய துபே 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. லக்னோ சார்பில் மேட் ஹென்ரி, மொசின் கான், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க வீரரான டிகாக் 3 பந்துகள் சந்தித்து 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கேஎல் ராகுல் 16 ரன்னிலும் படிக்கல் 13 ரன்னிலும் வெளியேறினர்.
அந்த நேரத்தில் ஸ்டோய்னிஸ் மற்றும் பூரன் ஜோடி சேர்ந்து சென்னை அணியின் பந்து வீச்சை விளாசினர். குறிப்பாக ஷர்துல் தாகூர் வீசிய 16-வது ஓவரில் பூரன் 2 சிக்சர் 1 பவுண்டரி என 17 ரன்கள் குவித்தார். சென்னை அணிக்கு பயத்தை காட்டிய பூரனை (15 பந்தில் 34 ரன்கள்) பத்திரனா வீழ்த்தினார்.

கடைசி ஓவரில் லக்னோ அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் நின்ற ஸ்டோய்னிஸ் நான்கு பந்துகளில் 18 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். ஸ்டோய்னிஸ் 124 ரன்னிலும் தீபக் ஹூடா 17 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் பத்திரனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.