Tamilவிளையாட்டு

ஐபிஎல் 2024 – குஜராத்தை வீழ்த்தி டெல்லி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, மெக்கர்க் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்கர்க் வழக்கும்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும் 14 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் வாரியர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சிறிது நேரத்தில் பிரித்வி ஷா 11 ரன்னிலும் ஷாய் ஹோப் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.இதனையடுத்து ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் -ரிஷப் பண்ட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் விளாசினர்.
இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது. அக்சர் பட்டேல் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டப்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

ரிஷப் பண்ட் 43 பந்தில் 88 ரன்கள் எடுத்தும், ஸ்டப்ஸ் 7 பந்தில் 26 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 4 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சஹா களமிறங்கினர். சுப்மன் கில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சஹா- சுதர்சன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்சன் அரை சதம் விளாசினார்.

39 ரன்களில் இருந்த போது சஹா அவுட் ஆனார். உடனே சாய் சுதர்சனும் 65 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த உமர்சாய் 1, ஷாருக்கான் 8, தெவாடியா 4 என வெளியேறினார். இதனையடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மில்லர் (55) அரை சதம் விளாசி அவுட் ஆனார். இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான் 3,4-வது பந்தை டாட் செய்தார். 5-வது பந்தை சிக்சர் பறக்கவிட்டார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ரன் ஏதும் விட்டுக் கொடுக்கவில்லை.

இதனால் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. டெல்லி அணி தரப்பில் ராசிக் தார் சலாம் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.