X

ஐபிஎல் 2024 – குஜராத்தை வீழ்த்தி டெல்லி வெற்றி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

குஜராத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரித்திமான் சாஹா மற்றும் கேப்டன் சுப்மன் கல் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடியும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து இழந்து தடுமாறியது.

டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டப்ஸ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களை குவித்தது. அந்த வகையில், ஐ.பி.எல். தொடரில் குறைந்த பட்ச ரன்களை குஜராத் அணி பதிவு செய்தது.

குறைந்த இலக்கை துரத்திய டெல்லி அணி துவக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் பிரித்வி ஷா 7 ரன்களிலும், ஜேக் ஃபிரேசர் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் பொரெல் மற்றும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடினர்.

அபிஷேக் பொரெல் 15 ரன்களிலும், ஷாய் ஹோப் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 92 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி சார்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் மற்றும் ஜான்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.