X

ஐபிஎல் 2024 – இன்று பெங்களூர், ஐதராபாத் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், இன்று (வியாழக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (மும்பை, சென்னை, பஞ்சாப், பெங்களூரு, டெல்லி அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (கொல்கத்தா, குஜராத் அணிகளிடம்) அடைந்துள்ளது. முதல் 3 ஆட்டங்களில் 2-ல் தோல்வியை சந்தித்த அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றியை ருசித்து எழுச்சி கண்டுள்ளது.

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் குவித்த அணி (பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள்) என்ற சாதனையை படைத்த ஐதராபாத் அணி தொடர்ந்து ரன்வேட்டையில் மிரட்டுகிறது. நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் சேர்த்து வியக்க வைத்துள்ள ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 324 ரன்), ஹென்ரிச் கிளாசென் (268), அபிஷேக் ஷர்மா (257) ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், மயங்க் மார்கண்டே வலுசேர்க்கிறார்கள்.

பெங்களூரு அணி இந்த சீசனிலும் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. தனது 2-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்த பெங்களூரு அணி 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 223 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 221 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. இதனால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது.

இனி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெற்று, மற்ற ஆட்டங்களின் முடிவு மற்றும் ரன்ரேட் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும். இன்றைய ஆட்டத்திலும் சறுக்கினால், கதை முடிந்து விடும்.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 379 ரன்கள்) ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (239), ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் அந்த அணியின் பந்து வீச்சு தான் தொடர்ந்து சொதப்புகிறது. அதிகபட்சமாக யாஷ் தயாள் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். முகமது சிராஜ், கேமரூன் கிரீன், கரண் ஷர்மா உள்ளிட்ட பவுலர்களின் பந்து வீச்சு எதிர்பார்த்தபடி இல்லை. கடைசி 2 ஆட்டங்களில் அந்த அணியினர் 220 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். எனவே பெங்களூரு பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியம்.

பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி 25 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற மனநிலையில் உள்ள பெங்களூரு அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். அதே நேரத்தில், வெற்றி உத்வேகத்துடன் ஆதிக்கம் செலுத்த ஐதராபாத் எல்லா வகையிலும் வரிந்து கட்டும். மொத்தத்தில், பேட்டிங்கில் ருத்ரதாண்டவமாடும் ஐதராபாத்தின் சவாலை பெங்களூரு சமாளிக்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் 13 ஆட்டத்திலும், பெங்களூரு 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டிக்கான இவ்விரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம், அப்துல் சமத், ஷபாஸ் அகமது, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் மார்கண்டே அல்லது வாஷிங்டன் சுந்தர்.

பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர் அல்லது அனுஜ் ராவத், விஜய்குமார் வைஷாக் அல்லது கரண் ஷர்மா, ரீஸ் டாப்லே, லோக்கி பெர்குசன், யாஷ் தயாள்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்