ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் உற்சாகத்தை கூட்டுவதற்காக பிசிசிஐ புதுபுது யுக்திகளை கையாண்டு வருகிறது. கால்பந்து லீக்கில் பாதி போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களை கடனுக்கு வாங்கலாம் அல்லது கொடுக்கலாம். இதனால் விளையாடாமல் இருக்கும் வீரர்கள் பயனடைவர்கள்.
இதுபோன்ற நடைமுறையை கடந்த முறை ஐபிஎல் சீசனில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களை மட்டுமே இப்படி கடனில் வாங்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதனால் எந்த அணியும் கடன் மூலம் வீரர்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் இந்த சீசனில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மற்றும் விளையாடும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களையும் கடனுக்கு வாங்க ஒவ்வொரு அணிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை 28 லீக் ஆட்டங்கள் முடிந்த பின் அல்லது ஒவ்வொரு அணிகளும் ஏழு போட்டிகளில் விளையாடிய பின்னர் தொடங்கும். கடனில் வாங்கும் வீரர் இரண்டு போட்டிகளுக்கு மேல் ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்திருக்கக் கூடாது.