ஐபிஎல் 15வது சீசன் – ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது
இந்திய கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டித் தொடரை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பாதியில் நிறுத்தப்பட்டது.
பின்னர் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த போட்டித்தொடரில் கூடுதலாக 2 அணிகளை சேர்த்து 10 அணிகளாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அகமதாபாத், லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்தநிலையில் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கும் தேதி குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
இதில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி ஐ.பி.எல். போட்டி தொடங்குகிறது என்றும், சென்னையில் முதல் ஆட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இறுதிப்போட்டி ஜூன் முதல் வாரத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனாலும் இதுவரை போட்டி அட்டவணை இறுதி செய்யப்படவில்லை.