ஐபிஎல் வீரர்கள் 50 பேருக்கு ஊக்கமருந்து பரிசோதனை
8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அதிகாரிகள், ஊழியர்கள் 9 பேர் அமீரகம் செல்ல உள்ளனர்.
அவசியம் எனில், அமீரகத்தின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் உதவியையும் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் போட்டி இல்லாத காலங்களிலும், ஐ.பி.எல். போட்டியின் போதும் வீரர்களிடம் சிறுநீர் மாதிரியையும், தேவைப்பட்டால் ரத்த மாதிரியையும் சேகரித்து பரிசோதனை செய்வார்கள்.
குறைந்தது 50 வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக ஊக்கமருந்து தடுப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. எளிதில் மாதிரிகளை எடுத்து சோதிக்க வசதியாக மூன்று மைதானங்களிலும், இரண்டு பயிற்சி இடங்களிலும் ஊக்கமருந்து தடுப்பு கட்டுப்பாடு மையங்கள் அமைக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தை ஊக்கமருந்து தடுப்பு முகமை கேட்டுக் கொண்டுள்ளது.