X

ஐபிஎல் வீரர்கள் ஏலம் நாளை கொல்கத்தாவில் நடக்கிறது

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நாளை (19-ந் தேதி) நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.

ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் மொத்தம் 332 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 186 இந்தியர்கள், வெளிநாட்டு வீரர்களில் 146 பேருக்கு பட்டியலில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில் இருந்தே 8 அணிகளும் 73 வீரர்களை ஏலத்தில் எடுக்கிறார்கள்.

ஐ.பி.எல். ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் யாருக்கும் இடம் இல்லை.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேக்ஸ்வெல், கிறிஸ் லின், மிச்சேல் மார்ஷ், கம்மின்ஸ், ஹாசில்வுட் மற்றும் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா), மேத்யூஸ் (இலங்கை) ஆகிய 7 வீரர்களுக்கு அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.

அதற்கு அடுத்தபடியாக ரூ.1½ கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியர்களில் ராபின் உத்தப்பா மட்டுமே இதில் இடம் பெற்றுள்ளார். அவர் கடந்த காலங்களில் கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணி நிர்வாகம் அவரை கழற்றி விட்டதால் ஏலபட்டியலுக்கு வந்துள்ளார். மற்ற 9 பேரும் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள்.

ரூ.1 கோடி அடிப்படை விலைக்கு 3 இந்தியர்கள் உள்பட 23 வீரர்களும், ரூ.75 லட்சத்துக்கு 16 வீரர்களும், ரூ.50 லட்சத்துக்கு 9 இந்தியர்கள் உள்பட 78 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களுக்கு ரூ.40 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலப்பட்டியலில் 11 தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் டி.என்.பி.எல். போட்டியில் ஆடியவர்கள்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் விளையாடும் பெரியசாமி மற்றும் வருண் சக்கரவர்த்தி, சாய்கிஷோர், சித்தார்த், மணிகண்டன், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், பாபா அபராஜித், முகமது, எம்.அபினவ், ஷாருக்கான் ஆகிய தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் இந்த ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு போவாரா? என்று ஆர்வமுடன் எதிர் பார்க்கப்படுகிறது. அவர் கடந்த காலங்களில் மும்பை, டெல்லி, பஞ்சாப் அணிகளில் விளையாடி இருக்கிறார்.

ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய அணிகள் மேக்ஸ்வெல்லை ஏலம் எடுக்க கடுமையாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல கிறிஸ்லின், கம்மின்ஸ், ஹோட்ரெல், அலெக்ஸ்கேரி, ஜெய்தேவ் உனட்கட், கிறிஸ்மோரிஸ், டாம் பேன்டன் ஆகியோர் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

கடந்த காலங்களில் பவன் நெகி, வருண் சக்கரவர்த்தி, பென் ஸ்டோக்ஸ், மில்ஸ், ஜடேஜா ஆகியோர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: sports news