X

ஐபிஎல் முதல் தகுதி சுற்று போட்டி – சென்னை, மும்பை அணிகள் நாளை மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.

‘லீக்’ முடிவில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 3 அணிகள் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்றன. ரன்ரேட் அடிப்படையில் மும்பை முதல் இடத்தையும் (+0.42), சென்னை 2-வது இடத்தையும் (+0.13), டெல்லி 3-வது இடத்தையும் (+0.04) பிடித்தன. இந்த 3 அணிகளும் ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.

சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகள் 6 வெற்றி, 8 தோல்வியுடன் தலா 12 புள்ளிகள் பெற்றன. ரன்ரேட் அடிப்படையில் ஐதராபாத் (+0.57) 4-வது இடத்தை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது.

கொல்கத்தா (+0.02) 5-வது இடத்தையும், பஞ்சாப் (-0.25) 6-வது இடத்தையும் பிடித்து வெளியேறின. ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தலா 11 புள்ளிகளுடன் 7-வது, 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

இன்று ஓய்வு நாளாகும். ‘பிளேஆப்’ சுற்று நாளை (7-ந்தேதி) தொடங்குகிறது. சென்னையில் நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 8-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் டெல்லி- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

10-ந்தேதி ‘குவாலிபையர் 2’ ஆட்டம் விசாகப்பட்டினத்திலும், 12-ந்தேதி இறுதிப்போட்டி ஐதராபாத்திலும் நடக்கிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வி அடையும் அணி டெல்லி- ஐதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் விளையாடும். டெல்லி- ஐதராபாத் ஆட்டத்தில் தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளைய ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழையுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வந்த சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்சிடம் 2 முறை தோற்றது. சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் 37 ரன் வித்தியாசத்திலும், மும்பையில் நடந்த போட்டியில் 46 ரன் வித்தியாசத்திலும் தோற்று இருந்தது. இதற்கு நாளைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பழிதீர்க்குமா? என்று சி.எஸ்.கே. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள்.

சென்னை அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்றாலும் உள்ளூர் மைதானத்தில் ஆடுவதால் ரசிகர்களின் ஆதரவுடன் மும்பையை வீழ்த்தி 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சூப்பர் கிங்ஸ் சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் டோனி (368 ரன்), ரெய்னா (359), டு பிலிசிஸ் (314) ஆகியோரும், பந்துவீச்சில் இம்ரான் தாகீர் (21 விக்கெட்), தீபக் சாஹர் (16 விக்கெட்), ஹர்பஜன் சிங், ஜடேஜா(தலா 13 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

தொடக்க வீரரான வாட்சன் இந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை. 14 ஆட்டத்தில் 258 ரன்களே எடுத்தார். சராசரி 18.42 ஆகும். ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே அதிகபட்சமாக 96 ரன் எடுத்தார். ஆனாலும் டோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருகிறார். வெற்றி அணி என்பதால் அதில் மாற்றம் செய்ய விரும்பவில்லை.

இதேபோல அம்பதி ராயுடுவும் போதுமான அளவுக்கு திறமையை வெளிப்படுத்தவில்லை. இதனால் முக்கியமான ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் வாட்சன், அம்பதிராயுடு ஆகியோர் அதிரடியை வெளிப்படுத்துவது அவசியமாகும். ஆல்ரவுண்டரான பிராவோவுக்கு சரியான முறையில் வாய்ப்பு கிடைக்காததால் அவர் தனது திறமையை வெளிப்படுத்த வில்லை. காயத்தால் கேதர் ஜாதவ் எஞ்சிய ஆட்டத்தில் விளையாடமாட்டார்.

சென்னை அணியின் பலமே சுழற்பந்து வீச்சு தான். இம்ரான் தாகீர் முதுகெலும்பாக இருக்கிறார். அவருக்கு உதவி புரியும் வகையில் ஹர்பஜன்சிங், ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்கள்.

சேப்பாக்கத்தில் நடந்த 7 ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் 6 போட்டியில் வெற்றி பெற்றது. இதனால் மும்பையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

சென்னை அணியை போலவே மும்பை இந்தியன்சும் சமபலம் பொருந்தியது. அந்த அணியின் பேட்டிங்கில் குயின்டன் டிகாக் (492 ரன்), கேப்டன் ரோகித்சர்மா (386 ரன்), சூர்யகுமார் யாதவ் (338 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் பும்ரா (17 விக்கெட்), மலிங்கா (15 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

மும்பை அணியின் பலமே ஹர்திக் பாண்டியா. அவர் ஆல்ரவுண்டர் வரிசையில் ஜொலிக்கிறார். ஹர்திக் பாண்டியா 380 ரன் குவித்து உள்ளார். இதேபோல 14 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

அவரது சகோதரர் குணால் பாண்டியா, பொல்லார்ட் ஆகியோரும் ஆல்ரவுண்டரில் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

சென்னை சூப்பர் கிங்சை 2 முறை வீழ்த்தி இருந்ததால் மும்பை அணி நம்பிக்கையுடன் ஆடி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வேட்கையில் இருக்கிறது.

இரு அணிகளுமே ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்று உள்ளன. இதனால் சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: sports news