ஐபிஎல் முதல் தகுதி சுற்று போட்டி – மும்பை, சென்னை அணிகள் இன்று மோதல்
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (18 புள்ளி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (12 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. இதில் 4-வது இடத்திற்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ரன்ரேட் அடிப்படையில் ஐதராபாத் அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டாப்-2 இடங்களை பிடித்த 3 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் கோதாவில் இறங்குகின்றன.
நடப்பு சாம்பியனான சென்னை அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்விகளை சந்தித்ததுடன் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. இதுவரை பங்கேற்ற அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8-வது முறையாக இறுதிசுற்றை எட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
கேப்டன் டோனி (368 ரன்), துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா (359 ரன்), பாப் டு பிளிஸ்சிஸ் (319 ரன்) உள்ளிட்டோர் சென்னை அணியின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறார்கள். ஆனால் ஷேன் வாட்சன் ஐதராபாத் அணிக்கு எதிரான மோதலை (96 ரன்) தவிர்த்து மற்ற ஆட்டங்களில் சோபிக்கவில்லை. இருப்பினும் முக்கியமான இந்த ஆட்டத்தில் அவர் கைகொடுக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாக சென்னை அணி தொடக்கத்தில் மெதுவாகவே ஆடும். இந்த சீசனை கவனித்தால் பவர்-பிளேயில் சராசரியாக சென்னை அணியின் ரன்ரேட் 6.21 ஆகவும், மிடில் ஓவர்களில் (7-15 ஓவர்) 6.93 ஆகவும் உள்ளது. இறுதி கட்டத்தில் தான் (15 முதல் 20-வது ஓவர் வரை) பட்டையை (சராசரி ரன்ரேட் 9.31) கிளப்புகிறார்கள்.
இங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்தது என்பதால் இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங், ரவீந்திர ஜடேஜா தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. தோள்பட்டை காயத்தால் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் ஆடாதது சற்று பின்னடைவு தான். அதே சமயம் உள்ளூரில் ஆடுவது கொஞ்சம் அனுகூலமான விஷயமாகும். இந்த சீசனில் சொந்த ஊரில் விளையாடிய 7 லீக்கில் 6-ல் சென்னை அணி வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணிக்கு, மும்பை இந்தியன்ஸ் என்றாலே கொஞ்சம் அலர்ஜி தான். இந்த சீசனில் அந்த அணிக்கு எதிரான இரண்டு லீக் ஆட்டங்களிலும் தோல்வியே (37 ரன் மற்றும் 46 ரன் வித்தியாசம்) மிஞ்சியது. ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் மும்பைக்கு எதிராக 26 ஆட்டங்களில் விளையாடி அதில் 15-ல் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. எனவே முந்தைய தோல்விகளுக்கு பழிதீர்க்குமா? என்ற எதிர்பார்ப்போடு சென்னை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் 9 வெற்றி, 5 தோல்வியை சந்தித்தது. இருப்பினும் ரன்ரேட்டில் அந்த அணி சென்னையை விட கொஞ்சம் மேலோங்கி நிற்கிறது. சரிசமகலவையில் அமைந்துள்ள மும்பை அணி சரியான நேரத்தில் எழுச்சி பெற்று விட்டது. ஹர்திக் பாண்ட்யா (373 ரன் மற்றும் 14 விக்கெட்) ஆல்-ரவுண்டராக மிரட்டுகிறார். இதே போல் கேப்டன் ரோகித் சர்மா, குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (17 விக்கெட்), மலிங்கா (15 விக்கெட்), ராகுல் சாஹர் (10 விக்கெட்), குருணல் பாண்ட்யா (10 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார்கள். எல்லா வகையிலும் பலம் வாய்ந்த அணியாக மும்பை திகழ்வதால் இந்த ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும். நடப்பு தொடரில் மும்பை அணியின் சராசரி ரன்ரேட் பவர்-பிளேயில் 7.98 ஆகவும், மிடில் ஓவர்களில் 7.55 ஆகவும், கடைசி கட்டத்தில் 11.19 ஆகவும் இருக்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணி உடனடியாக வெளியேறாது. அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, துருவ் ஷோரே அல்லது முரளிவிஜய், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங், தீபக் சாஹர்.
மும்பை: குயின்டான் டி காக், ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், குருணல் பாண்ட்யா, ராகுல் சாஹர், மலிங்கா, பும்ரா, மெக்லெனஹான் அல்லது மயங்க் மார்கண்டே அல்லது அனுகுல் ராய்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.