கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த முடியாமல் போனது. ஐக்கிய அரபு அமீரகம் தயாராக இருந்ததால் தொடர் முழுவதும் ஷார்ஜா, துபாய், அபு தாபியில் நடைபெற்றது. ஐபிஎல் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிசிசிஐ 100 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் போட்டி நடைபெறும்போது 8 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானங்களை பெற்றிருந்தாலும், அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு போட்டி கட்டணத்தை செலுத்த வேண்டும். சில மாநில அரசுகள் பொழுதுபோக்கு வரியை தள்ளுபடி செய்யாவிடில் ஒரு போட்டிக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கட்டணம் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
100 கோடி ரூபாயைத் தவிர, 14 ஐந்து நட்சத்திர ஓட்டல்களை மூன்று மாதத்திற்கு புக் செய்திருந்தது. இதன்மூலமும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது. ரசிகர்கள் போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை என்றாலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருமானம் போதுமான அளவு கிடைத்துள்ளது.