Tamilவிளையாட்டு

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னையில் தொடங்கியது

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை இரண்டு வார காலத்துக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் ஐ.பி.எல். முழு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதனால் 12-வது ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்டரில் காலை 11.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியது. டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

டிக்கெட் வாங்குவதற்காக நள்ளிரவில் இருந்தே ரசிகர்கள் ஸ்டேடியம் முன்பு திரண்டு இருந்தனர். ரசிகர்கள் நீண்ட கியூவில் நின்று குறைந்தபட்ச டிக்கெட்டின் விலையான ரூ.1,300யை வாங்கி சென்றனர். ஒருவருக்கு 2 டிக்கெட்டுகளே கொடுக்கப்பட்டது.

இதேபோல ரூ.2,500, ரூ.5,000, ரூ.6,500 விலைகளிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

நாளை முதல் காலை 10 மணிக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். டிக்கெட் விற்பனையையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

இதேபோல புக்மை ஷோ (in.bookmysho.com) என்ற இணைய தளத்திலும் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறும். குறைந்த விலையான ரூ.1,300க்கான டிக்கெட்டுகள் கவுண்டரில் மட்டுமே கிடைக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் எஞ்சிய ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது ஆட்டம் 31-ந்தேதி நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்சுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *