ஐபிஎல் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமம் 60 ஆயிரம் கோடிக்கு ஏலம் – 10 நிறுவனங்கள் பங்கேற்பு

அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2023-2027) ஐ.பி.எல். போட்டிக்குரிய டி.வி. ஒளிபரப்பு உரிமம் மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றுக்கான ஏலம் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2018-ல் இருந்து 2022-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.16,347 கோடிக்கு டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்தது. இந்த உரிமம் நடந்து முடிந்த ஐ.பி.எல். 15-வது சீசனுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் முதல்முறையாக மின்னணு ஏலம் மூலம் உரிமம் வழங்கப்பட இருக்கிறது. இந்த உரிமத்தை வாங்குவதற்காக டிஸ்னி-ஸ்டார், சோனி, ஜீ குழுமம், ரிலையன்ஸ் வியாகாம்18 உள்ளிட்ட பத்து முன்னணி நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.

இந்த முறை ஐ.பி.எல். போட்டிக்கான உரிமத்தை 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி ‘ஏ-பிரிவில்’ இந்திய துணை கண்டத்துக்கு மட்டும் டி.வி. ஒளிபரப்பு உரிமம், ‘பி-பிரிவில்’ இந்திய துணை கண்டத்துக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம். ‘சி-பிரிவில்’ இந்திய துணை கண்டத்துக்கு மட்டும் ஐ.பி.எல். தொடக்க ஆட்டம், இறுதி சுற்று, பிளே-ஆப் உள்ளிட்ட குறிப்பிட்ட 18 ஆட்டங்களுக்கான டிஜிட்டல் உரிமம், கடைசியாக ‘டி-பிரிவில்’ உலக நாடுகளுக்கான டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் ஆகியவை தரப்படவுள்ளது.

இந்த 4 பிரிவுகளுக்கும் அடிப்படை விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் சேர்த்து மொத்தத்தில் ரூ.60 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த ஏலத்தில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள், தொகையை குறிப்பிட்டு ஏலம் கேட்பார்கள். இரண்டு அல்லது 3 ரவுண்டுகள் ஏலம் கேட்க வாய்ப்பு வழங்கப்படும். யார் அதிக தொகைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு உரிமம் ஒதுக்கப்படும். ஆனால் அதிக தொகை கேட்டுக் கொண்டே போனால் ஏலம் மறுநாள் கூட நீடிக்கும். இந்த ஏலத்திற்கான முடிவு நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools