ஐபிஎல் போட்டிகளில் பீல்டர்களை மாற்றும் போது நடுவர்கள் கவனிக்க வேண்டும் – முகமது கைப்
ஐபிஎல் தொடரில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியின்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இக்கட்டான நிலையில் மோசமான பீல்டர்களுக்குப் பதிலாக சிறந்த பீல்டர்களை அடிக்கடி மாற்றியது.
இதற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளர் முகமது கைப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து டெல்லி அணியின் துணைப் பயிற்சியாளர் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் பெரும்பாலான ஆட்டங்கள் நள்ளிரவில்தான் முடிவடைந்து வருகிறது. ஒவ்வொரு அணிகளும் மோசமான பீல்டர்களை வெளியில் தூக்கிவிட்டு, மாற்று வீரராக சிறந்த பீல்டரை களம் இறக்குகிறது. அணிகள் இவ்வாறு பீல்டர்களை மாற்றும்போது நடுவர்கள் கவனிக்க வேண்டும்.
உதாரணத்திற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது அந்த்ரே ரஸல் வெளியில் சென்றுவிட்டார். அவருக்குப் பதிலாக ரிங்கி சிங் பீல்டிங் செய்ய வந்தார். பியூஸ் சாவ்லா விரைவாக நான்கு ஓவர்கள் வீசிவிட்டு வெளியில் சென்றுவிட்டார். அவருக்குப் பதிலாக மீண்டும் ரிங்கு கிங் பேட்டிங் செய்ய வந்தார்.
அதேபோல் பஞ்சாப் அணிக்கெதிராகவும் நடந்தது. சர்பிராஸ் அகமது கையுறையில் பந்து தாக்கியபின் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டதா? என்று எனக்குத் தெரியாது. கருண் நாயர் பீல்டராக களம் இறங்கி கொலின் இங்க்ராம் கேட்சை சூப்பராக பிடித்தார்.
அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. என்னைப் பொறுத்த வரைக்கும் வீரர்களை மாற்றுவது சரியானது அல்ல. இதை நாங்கள் நடுவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம்’’ என்றார்.