ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட போட்டியில் நேற்றுடன் 68 போட்டிகள் முடிந்துவிட்டன. இன்னும் 2 லீக் ஆட்டமே எஞ்சி உள்ளன.
குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
குஜராத் 20 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 18 புள்ளியுடன் 2ம் இடத்திலும், லக்னோ 18 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் , 4 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 5 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில், பிளே ஆப் சுற்றில் நுழையும் 4வது அணிக்கான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் உள்ளன. பெங்களூரு அணி 16 புள்ளிகளுடனும், டெல்லி அணி 14 புள்ளிகளுடனும் உள்ளன.
டெல்லி அணி இன்று இரவு மும்பையுடன் மோதுகிறது. டெல்லி அணியின் ரன்ரேட் நன்றாக இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றால்தான் ரன்ரேட் அடிப்படையில் அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி தோற்றால் பெங்களூரு அணி எளிதில் பிளேஆப் சுற்றுக்கு சென்றுவிடும். எனவே இன்றைய போட்டி சுவாரசியமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் நாளை நடக்கிறது.