ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ முடிவு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட் போட்டிகளும் அடங்கும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் இதுவரை தொடங்கவில்லை. தொடங்கும் தேதியும் தீர்மானிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும், தற்போது வெளிநாட்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதுவே கடைசி வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டில் ஐபிஎல் நடப்பது ஒன்றும் புதிதல்ல எனவும், ஏற்கெனவே 2009-ம் தென்னாப்பிரிக்காவிலும், 2014-ம் ஆண்டு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலும் நடத்தப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் முடிந்தவரை இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முன்னுரிமை தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.