X

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை ரிஷப் பண்ட் பெற்றுவிட்டார் – பிசிசிஐ அறிவிப்பு

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கடந்த 2022-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார்.

கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2023 ஐபிஎல் சீசன் ஆகியவற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். விபத்து மூலம் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீண்ட நிலையில், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் மீண்டும் விளையாட்டு போட்டிக்கு திரும்புவதற்கான உடற்திறன் சார்ந்த பயிற்சியை மேற்கொண்டு வந்தார். மெல்ல மெல்ல பேட்டிங் செய்வதற்கு ஏற்ப அவர் உடற்தகுதி பெற்று வந்தார்.

இதனால் 2024 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவார் என அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வந்தது. பேட்ஸ்மேனாக களம் இறங்குவார். ஆனால் விக்கெட் கீப்பராக செயல்படுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற்று விட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளார். மேலும், விக்கெட் கீப்பர்பேட் ஸ்மேனாக செயல்படவும் அனுமதி அளித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று, ரிஷப் பண்ட் சிறப்பான வகையில் விக்கெட் கீப்பராக பணியாற்றினால் டி20 உலகக் கோப்பைப்கான இந்திய அணியில் இடம்பெற பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 14 மாதங்கள் உடற்திறன் சார்ந்த பயிற்சியை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது உடற்தகுதி பெற்று வவிட்டதாக பிசிசிஐயின் மருத்துவக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளையில் காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றம் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் 2024 ஐபிஎல் சீசீசனில் விளையாடமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளது.