ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்த டோனி
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் (நாட்-அவுட்) 41 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் 29 ரன்னும், இஷான் கிஷன் 23 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வரும் கேப்டன் டோனி, ஐ.பி.எல். போட்டியின் விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.
இறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர்கள் குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை டோனி தனது கேட்ச் மூலம் ஆட்டம் இழக்க வைத்தார். 190 ஐ.பி.எல். ஆட்டங்களில் விளையாடி இருக்கும் டோனி இதுவரை 132 விக்கெட்டுகளை (94 கேட்ச், 38 ஸ்டம்பிங்) வீழ்த்த காரணமாக இருந்துள்ளார்.
இதற்கு முன்பு கொல்கத்தா அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் 182 ஆட்டங்களில் 131 விக்கெட்டுகள் (101 கேட்ச், 30 ஸ்டம்பிங்) விழ காரணமாக இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டோனி தகர்த்துள்ளார்.