ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்கும் – பிசிசிஐ நம்பிக்கை

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி இந்தியாவில் தொடங்கியது. போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் போது சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தள்ளி வைக்கப்படுவதாக மே 2-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தன. அதன்பின் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

வருகிற செப்டம்பர் 19-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை எஞ்சிய ஆட்டங்கள் நடக்கிறது.

இந்தியாவில் ஐ.பி.எல். போட்டி நடந்தபோது கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்தன.

இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் ஐ.பி.எல். போட்டியில் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய பொதுச்செயலாளர் உஸ்மானி கூறும்போது, இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும் ஐக்கிய அரபு எமிரேட்சிடமும் அதுபற்றி பேசுவோம் என்றார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் வாரியம், ரசிகர்கள் கூட்டத்தை விரும்புகிறது. ஆனால் வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். அங்கு (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதால், இந்த முறை ரசிகர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அனுமதி அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அது அந்நாட்டு அரசின் முடிவாக இருக்கும்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் மேலும் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஐ.பி.எல். போட்டியில் 60 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools