ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த சீசனில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக கம்பேக் கொடுக்கவுள்ளார். நேற்று முதல் டெல்லி பயிற்சி முகாமில் இணைந்த ரிஷப் பண்ட், தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் டெல்லி அணியால் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக், வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். டெல்லி அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்ட போது, இந்த சீசனில் விளையாட ஆர்வமாக இருந்தேன். ஆனால் சூழ்நிலை வேறு மாதிரி அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து பின் வாங்கியதற்கு சொந்த காரணங்களை கூற வேண்டும் என்று நினைத்ததில்லை. கடந்த மாதம் எனது பாட்டி மறைந்துவிட்டார். சிறு வயதில் இருந்து எனது பாட்டியின் வீட்டில் வளர்ந்தவன், அவர் எப்போதும் எனக்கு ஒரு தூண் போல் நம்பிக்கை அளித்தவர்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அபுதாபியில் இருந்து புறப்படும் போது தான் பாட்டியின் உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனால் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தேன். தற்போது எங்களிடம் இருந்து பாட்டி மறைந்துவிட்டார். இதனால் எனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழலில் உள்ளேன்.
குடும்பத்தை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதே சரியான முடிவாக கருதுகிறேன். என்னிடம் இன்னும் பல ஆண்டு கால கிரிக்கெட் மீதமிருப்பதால், வரும் காலங்களில் நிச்சயம் விளையாடுவேன். இந்த கடினமான சூழலில் எனக்கு ஆதரவாக இருந்த இங்கிலாந்து நிர்வாகம் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் இரண்டுக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்.
என்று ஹாரி ப்ரூக் கூறினார்.