இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இதில் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ந் தேதி காணொலி வாயிலாக நடைபெறுகிறது என்றும், கொரோனா தொற்று சூழ்நிலையில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் உலக கோப்பை போட்டி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது என்பது பற்றி கிரிக்கெட் வாரிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் வருகிற அக்டோபர்-நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது. இருப்பினும் கொரோனா பரவல் மேலும் அதிகரித்து இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டால், மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனாலும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் இருந்து மாற்றலாமா? என்கிற விஷயத்தில் அவசரம் காட்டாமல் ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு நிலைமையை ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி முடிவுக்கு வரலாம் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட இருக்கிறது.
4 அணிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இந்த போட்டி தொடரில் 29 ஆட்டங்கள் முடிந்து இருக்கும் நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இந்த ஆட்டங்கள் நடக்காமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும். எனவே ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை எங்கு, எப்போது நடத்தலாம் என்பது குறித்து பிரதானமாக விவாதிக்கிறார்கள். மேலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் ஜூன் 18-ந் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி அடுத்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது.
ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு வசதியாக இந்த டெஸ்ட் தொடர் தேதியை மாற்றி அமைக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த தேதி மாற்றத்துக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதிக்கும் பட்சத்தில் அதற்கு பிரதிபலனாக தங்கள் நாட்டிலேயே ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் வருவாய் கிடைக்கும். அத்துடன் அங்குள்ள கவுண்டி அணிகள் இந்த போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து இருந்தன. ஐ.பி.எல். போட்டியை நடத்தும் வாய்ப்பில் ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகியவை இருந்தாலும் இங்கிலாந்தில் இந்த போட்டி நடைபெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.