2013-ம் ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்து கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்து இருந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோனி உள்ளிட்ட சில வீரர்களுக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் கசிந்தன.
இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி விசாரணை நடத்தி தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான கமிட்டி தண்டனையை முடிவு செய்து அறிவித்தது. சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தலா 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை முடிந்து சென்னை, ராஜஸ்தான் அணிகள் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பின.
ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த டோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆவணப்படத்துக்காக தனது மவுனத்தை கலைந்து முதல்முறையாக சூதாட்டம் குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது:-
2013-ம் ஆண்டு என் வாழ்வில் மிகவும் கடினமான காலக்கட்டமாகும். அப்போது நான் அனுபவித்த வேதனையை போல் அதற்கு முன்பு ஒருபோதும் அனுபவித்தது கிடையாது. 2007-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியதை எல்லோரும் கடுமையாக விமர்சித்தனர். ஏனெனில் அந்த உலக கோப்பையில் நாங்கள் சரியாக ஆடவில்லை. ஆனால் 2013-ம் ஆண்டில் நடந்த விஷயம் இதற்கு முற்றிலும் மாறானது. மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங் குறித்து மக்கள் பேசினார்கள். நாட்டிலேயே அதிகம் பேசப்படும் பொருளாக அது தான் இருந்தது.
சூதாட்ட விவகாரத்துக்காக வழங்கப்பட்ட தண்டனை சரியானது தான். ஆனால் வழங்கப்பட்ட தண்டனையின் அளவு சரியானதா? என்ற கேள்வி எழுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். தனிப்பட்ட முறையிலும், கேப்டனாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் நிறைய செய்து இருக்கிறேன். இந்த விஷயத்தில் அணி என்ன தவறு செய்தது என்பது தான் எனது கேள்வியாகும். எங்கள் அணியின் நிர்வாகம் தரப்பில் தவறு இருந்தது உண்மை தான். ஆனால் வீரர்கள் என்ன தவறு செய்தார்கள்?.
‘ஸ்பாட் பிக்சிங்’ பிரச்சினையில் எனது பெயரும் இழுக்கப்பட்டது. ஸ்பாட் பிக்சிங்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நானும் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன. கிரிக்கெட்டில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் யார் வேண்டுமானாலும் ஈடுபட முடியும். நடுவர்கள், பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் கூட ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட முடியும். ஆனால் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவதற்கு அணியில் பெரும்பாலான வீரர்களின் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.
எனது மவுனத்தை பலரும் தவறாக புரிந்து கொண்டார்கள். என்னை பொறுத்தமட்டில் இந்த விஷயத்தை மற்றவர்களுடன் பேச நான் விரும்பியது இல்லை. அதே நேரத்தில் மற்றவர்களால் விமர்சிக்கப்பட்டேன். எனது கிரிக்கெட் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். எனக்கு எல்லாவற்றையும் விட கிரிக்கெட் தான் முக்கியம். நான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்து இருப்பதற்கும், சாதித்து இருப்பதற்கும் கிரிக்கெட் தான் காரணம்.
என்னை பொறுத்தவரை கொலை தான் பெரிய குற்றம் என்று நான் சொல்லமாட்டேன். கிரிக்கெட்டுக்கு துரோகம் செய்து ‘மேட்ச் பிக்சிங்’ செய்வது கொலையை காட்டிலும் பெரிய குற்றம். நான் அந்த குற்றத்தில் ஈடுபட்டு இருந்தால் அது எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.
ஒரு போட்டியின் முடிவு அற்புதமாக இருந்து, அந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்து இருக்குமோ? என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள். என் வாழ்க்கையில் இதுபோன்ற கடினமான விஷயங்களை இதற்கு முன் நான் சந்தித்ததில்லை. மேலும் இத்தகைய பிரச்சினைகளை மனதில் வைத்து கொண்டு தொடர்ந்து சிறப்பாக செயல்படுவது என்பது எளிதான காரியம் அல்ல.
இவ்வாறு டோனி கூறினார்.