ஐபிஎல் கிரிக்கெட் 2023 – லக்னோவை வீழ்த்தி குஜராத் வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 227 ரன்களை குவித்தது. ஷுப்மன் கில் 94 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சகா 43 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 81 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி கைல் மேயர்ஸ், டி காக் அதிரடியாக ஆடியது. அணியின் எண்ணிக்கை 88 ஆக இருந்தபோது கைல் மேயர்ஸ் 48 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. டி காக் ஓரளவு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 70 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆயுஷ் பதோனி 21 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. குஜராத் சார்பில் மோகித் சர்மா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.