Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் 2023 – லக்னோ, ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

தனது முதல் ஆட்டத்தில் டெல்லியை பந்தாடிய லக்னோ அணி, 2-வது ஆட்டத்தில் சென்னையிடம் 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் உள்ள லக்னோ அணிக்கு தென்ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக் வருகை தந்திருப்பது உற்சாகத்தை அளித்துள்ளது.

அதே நேரத்தில் யாரை கழற்றி விடுவது என்பதில் அணி நிர்வாகத்துக்கு தலைவலியாக அமைந்துள்ளது. அனேகமாக வெளிநாட்டு வீரர்களில் நிகோலஸ் பூரன் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரில் ஒருவரது இடம் காலியாகி விடும். முதல் 2 ஆட்டங்களிலும் அரைசதம் நொறுக்கிய கைல் மேயர்ஸ் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். உள்ளூரில் ஆடுவது லக்னோ அணிக்கு சாதகமான அம்சமாகும்.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 72 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் எய்டன் மார்க்ரம் விளையாடவில்லை. இப்போது அவர் அணியுடன் இணைந்து விட்டார். அத்துடன் ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜேன்சன் ஆகிய தென்ஆப்பிரிக்க வீரர்களும் சர்வதேச போட்டியை முடித்துக் கொண்டு வந்து விட்டனர். இதனால் இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியினர் கூடுதல் நம்பிக்கையுடன் ஆடுவார்கள்.

பலம் வாய்ந்த லக்னோவை சாய்த்து ஐதராபாத் வெற்றிக் கணக்கை தொடங்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.