10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மும்பையில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் 11 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும் லிவிங்ஸ்டோன் 10 ரன்னிலும் அவுட்டாகினர். அதர்வா டெய்ட் 29 ரன்னில் 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 50 பந்தில் 92 ரன்களை குவித்தது. பாட்டியா 41 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 29 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஜிதேஷ் சர்மா 7 பந்தில் 4 சிக்சர் உள்பட 25 ரன்கள் குவித்தார். இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.
மும்பை அணி சார்பில் பியூஷ் சாவ்லா, கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக கேமரன் கிரீன் அரை சதம் எடுத்து 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 57 ரன்களும், ரோகித் சர்மா 44 ரன்களும், டிம் டேவிட் 25 ரன்களும், திலக் வர்மா 3 ரன்களும், இஷான் கிஷன் ஒரு ரன்னும் எடுத்தனர். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.