ஐபிஎல் கிரிக்கெட் 2023 – பெங்களூரை வீழ்த்தி மும்பை வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது.
மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்களும், டூ பிளசிஸ் 41 பந்துகளில் 65 ரன்களும் விளாசினர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 120 ரன்கள் சேர்த்தது.
மும்பை அணி சார்பில் ஜேசன் பெஹ்ரண்டாப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேமரான் கிரீன், கிறிஸ் ஜோர்டான், குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இஷான் கிஷன் 21 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா ஜோடி சிக்சர், பவுனட்ரிகளாக விளாசியது. இந்த ஜோடி 140 ரன்கள் சேர்த்தது.
சூர்யகுமார் யாதவ் 35 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்தார். இறுதியில், மும்பை அணி 16.3 ஓவரில் 200 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வதேரா 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதன்மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்துக்கு முன்னேறியது.