ஐபிஎல் கிரிக்கெட் 2023 – பெங்களூர் அணியை வீழ்த்தி லக்னோ வெற்றி

ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது.

டூ பிளெசிஸ் 79 ரன்களுடன் களத்தில் இருந்தார். விராட் கோலி 61 ரன்களும், மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 59 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் டக் அவுட்டானார். தீபக் ஹூடா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். குருணால் பாண்ட்யா டக் அவுட்டானார். கே.எல்.ராகுல் 18 ரன்னில் வெளியேறினார். விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பாக ஆடினார். அவர் 30 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து இறங்கிய பூரன், பதோனி ஜோடி பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக, நிகோலஸ் பூரன் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். பூரன் 15 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் 19 பந்தில் 62 ரன்னில் அவுட்டானார். ஆயுஷ் பதோனி கடைசி கட்டத்தில் 30 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், லக்னோ அணி 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ 3வது வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools