Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் 2023 – பெங்களூருவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி

16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரரான ரஹமதுல்லா குர்பாஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார். வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங், நிதிஷ் ரானா, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் விரைவில் அவுட்டாகினர். இதனால் கொல்கத்தா 5 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்து திணறியது.

அடுத்து இறங்கிய ரிங்கு சிங், ஷர்துல் தாக்குர் ஜோடி பெங்களூரு பந்துவீச்சை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். குறிப்பாக, ஷர்துல் தாக்குர் 20 பந்தில் அரை சதமடித்து அசத்தினார். அவருக்கு ரிங்கு சிங் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது. ரிங்கு சிங் 32 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிரடியில் மிரட்டிய ஷர்துல் தாக்குர் 29 பந்தில் 3 சிச்கர், 9 பவுண்டரி உள்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது.

இந்நிலையில் போட்டியின் இறுதியில், 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. 205 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி, 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.