ஐபிஎல் கிரிக்கெட் 2023 : பஞ்சாப்பை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி
16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 66 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம் கர்ரன் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஐதராபாத் சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், உம்ரான் மாலிக், ஜேன்சன், ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இறுதியில், பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் விளையாடியது. தொடக்கத்தில் ஹார்ரி புரூக் 13 ரன்களும், மயங்க் அகர்வால் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ராகுல் திரிபாதி , மார்க்ரம் இணைந்து சிறப்பாக விளையாடினர்.
ராகுல் திரிபாதி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில்17.1 ஓவர்கள் முடிவில் 2விக்கெட் இழப்பிற்கு 145ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திரிபாதி 74ரன்கள் , மார்க்ரம்37 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர்.