ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக ஷிவம் தூபே 34 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். டேவன் கான்வே 30 ரன்னும், ஜடேஜா 20 ரன்னும் எடுத்தனர். கொல்கத்தா சார்பில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், வைபவ் அரோரா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. முன்னணி வீரர்களை தீபக் சாஹர் விரைவில் வெளியேற்றினார். இதனால் 33 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா திணறியது. அடுத்து இறங்கிய கேப்டன் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.
4வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்த நிலையில் ரிங்கு சிங் 54 ரன்னில் வெளியேறினார். இறுதியில், கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்து வென்றது. நிதிஷ் ராணா 57 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சென்னை சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட் வீழ்த்தினார்.