16-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.
நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 13 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. சென்னை அணியில் டேவன் கான்வே (5 அரைசதத்துடன் 458 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் (3 அரைசதத்துடன் 384 ரன்கள்), ஷிவம் துபே (3 அரைசதத்துடன் 290 ரன்கள்), ரகானே ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே(19 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (15 விக்கெட்), பதிரானா (10 விக்கெட்) மொயீன் அலி, தீக்ஷனா, ஆகாஷ் சிங் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். சேப்பாக்கம் மைதானம் சென்னை அணியின் கோட்டையாக கருதப்படுகிறது.
இந்த சீசனில் இங்கு சென்னை அணி ஆடியுள்ள 5 ஆட்டங்களில் மூன்றில் வெற்றி கண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் சென்னை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.
இதேபோல, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவிய அந்த அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றிகளை குவித்து எழுச்சி கண்டது.
பேட்டிங்கில் டேவிட் வார்னர் (4 அரைசதத்துடன் 330 ரன்கள்), பில் சால்ட், மனிஷ் பாண்டேவும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மாவும் வலு சேர்க்கிறார்கள். அக்ஷர் பட்டேல் (246 ரன்கள், 7 விக்கெட்), மிட்செல் மார்ஷ் (120 ரன்கள், 9 விக்கெட்) ஆகியோர் ஆல்-ரவுண்டர்களாக அசத்தி வருகிறார்கள்.
உள்ளூரில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்து ‘பிளே-ஆப்’ சுற்றை நோக்கி தொடர்ந்து முன்னேற சென்னை அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும் என்பதால் வெற்றிக்காக எல்லா வகையிலும் டெல்லி அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, அஜிங்யா ரஹானே, அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, டோனி (கேப்டன்), மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், பதிரானா, துஷர் தேஷ்பாண்டே.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர் (கேப்டன்) பில் சால்ட், மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசவ், அக்ஷர் பட்டேல், அமன் கான், மனிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.