ஐபிஎல் கிரிக்கெட் 2023 : குஜராத்தை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி
ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சஹா 4 ரன்னில் வெளியேறினார். சாய் சுதர்சன் 20 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்னிலும் அவுட்டாகினர்.
பொறுப்புடன் ஆடிய ஷுப்மன் கில் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் மனோஹர் அதிரடியாக ஆடி 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 27 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 30 பந்தில் 46 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை சேர்த்தது. ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளின் அரை சதம் அடித்து 60 ரன்களின் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஷிம்ரன் ஹெட்மெயர் அரை சதம் அடித்து 56 ரன்களின் அவுட்டானார். தேவ்தத் படிக்கல் 26 ரன்களும், துருவ் 18 ரன்களும், ரவிச்சந்திரன் அஷ்வின் 10 ரன்களும், ரியான் பராக் 5 ரன்களும், யாஷவி ஜெய்ஸ்வால் ஒரு ரன்கள் எடுத்தனர்.
குஜராத் அணி சார்பில், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா மற்றும் நூர் அகமது தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தின் இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.