ஐபிஎல் கிரிக்கெட் 2023 – ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 ரன்னிலும், ராகுல் திரிபாதி 15 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் மார்கிராமுடன் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பொறுப்புடன் ஆடிய கிளாசன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஹாரி புரூக் 27 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 63 பந்துகளில் சதம் அடித்து ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து, பிளெஸ்ஸி 71 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 5 ரன்களும், பிரேஸ்வெல் 4 ரன்களும் எடுத்து ஆட்டத்தை இழக்காமல் விளையாடினர்.
இந்த ஆட்டத்தின் முடிவில், பெங்களூரு அணி 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி ஐதரபாத்தை வீழ்த்தி அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.