Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் – வெற்றியின் மூலம் வார்னேவுக்கு மரியாதை செலுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சேர்த்து 20 சிக்சர்கள் பறக்கவிட்டனர். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டும் 14 சிக்சர்கள் அடித்துள்ளனர். அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன்  5 சிக்சர்கள் விளாசினார்.

இரு அணிகளின் பவுண்டரி (28) மற்றும் சிக்சர்(20) மூலம் அடித்த ரன்கள் 232 ஆகும். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி மோசமான சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் பவர் பிளேயில் குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனை ஐதராபாத் அணி படைத்துள்ளது. பவர் பிளேயில் 14 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

இந்த போட்டியில் 3 தமிழக வீரர்கள் இடம்பெற்றனர். வாஷிங்டன் சுந்தர், நடராஜன், அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 3 பேரும் பந்து வீச்சில் அதிக தாக்கம் செலுத்தவில்லை. வாஷிங்டன் சுந்தர் மட்டும் பேட்டிங்கில் பட்டையை கிளப்பினார்.

இந்த போட்டியில் 2 முறை விக்கெட்டில் இருந்து தப்பிய ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் 2000 ரன்களை கடந்துள்ளார். ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட்டில் ரசிகர்கள் அதிக பேருக்கு சந்தேகம் இருந்திருக்கும். பிரதிஷ் கிருஷ்ணா வீசிய பந்தில் வில்லியம்சன் பேட்டில் உரசி கீப்பரிடம் சென்றது. அதனை பிடிக்க தவறி அவரது கையில் பட்டு வெளியேறிய பந்தை சிலிப்பில் இருந்த படிக்கல் கேட்ச் பிடிப்பார். அதில் அந்த பந்து தரையில் படுவது போலவும் இருக்கும் விரலில் படுவது போலவும் இருக்கும். இதனை 3-வது அம்பயர் பார்த்து உடனே தனது முடிவை தெரிவிப்பார். இது ரசிகர்களிடையே கேள்வி கூறியாகவே உள்ளது.

ராஜஸ்தான் அணி வீரர்கள் படிக்கல்-சாம்சன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்தனர். ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர்-ஷெப்பர்ட் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார்.

நேற்றைய போட்டியின் முக்கிய நிகழ்வாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவானும் ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான ஷேன் வார்னே போஸ்டர் வைக்கப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் எப்போதும் முதல் அரசர் என எழுதப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது.  அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது படம் வைக்கபட்டிருந்தாக அணி நிர்வாகம் தெரிவித்தது.