ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தொடக்க வீரர் ஷிகர் தவான் மிகவும் அபாரமாக ஆடினார். அவர் 50 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் தவான் இந்த சீசனில் 600 ரன்னை தொட்டார். அவர் 16 ஆட்டத்தில் 603 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.
அதிகபட்சமாக 106 ரன் எடுத்துள்ளார். அவர் 2 சதமும், 4 அரை சதமும் தவான் அடித்துள்ளார். அவரது சராசரி 46.38 ஆகும். ஸ்டிரைக் ரேட் 145.65 ஆகும்.
அவர் 68 ரன் எடுத்தால் லோகேஷ் ராகுலை முந்தி முதல் இடத்தை பிடிப்பார். இறுதிப்போட்டியில் தவான் அதை சாதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய ஆட்டத்தில் தவான் 78 ரன் எடுத்ததன் மூலம் ரோகித் சர்மாவை முந்தினார். ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் தவான் 4-வது இடத்தில் உள்ளார். அவர் 174 இன்னிங்சில் 5,182 ரன் எடுத்துள்ளார்.
ரோகித் சர்மா 194 இன்னிங்சில் 5,162 ரன்னுடன் 5-வது இடத்தில் உள்ளார்.