X

ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு மொகாலியில் அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது.

ராஜஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஸ்டீவன் சுமித், லியாம் லிவிங்ஸ்டோன், கே.கவுதம் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி, சோதி மற்றும் அறிமுக வீரராக ஆஷ்டன் டர்னர் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் அணியில் சாம் குர்ரன், சர்ப்ராஸ் கான், ஆண்ட்ரூ டை ஆகியோருக்கு பதிலாக டேவிட் மில்லர், முஜீப் ரகுமான், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கிறிஸ் கெய்லும், லோகேஷ் ராகுலும் பஞ்சாப் அணியின் இன்னிங்சை தொடங்கினர். உனட்கட்டின் பந்து வீச்சில் 2 சிக்சர் பறக்க விட்ட கெய்ல் சற்று நிதானமாக செயல்பட்டார். 6-வது ஓவர் வரை களத்தில் நின்ற கெய்ல் (30 ரன், 22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஜோப்ரா ஆர்ச்சரின் வேகப்பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆகி நடையை கட்டினார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் 26 ரன்கள் (12 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு, தடுமாறிக்கொண்டிருந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுடன் டேவிட் மில்லர் கைகோர்த்தார். இருவரும் ரன்ரேட்டை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். சோதி, உனட்கட்டின் ஓவர்களில் சிக்சர்கள் விரட்டிய இவர்கள் ரன்ரேட்டை 9 ரன்களை தொட வைத்தனர்.

அணியின் ஸ்கோர் 152 ரன்களாக உயர்ந்த போது ராகுல் 52 ரன்களில் (47 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அதைத் தொடர்ந்து நிகோலஸ் பூரன் (5 ரன்), மன்தீப்சிங் (0) அடுத்தடுத்து வெளியேற ரன்ரேட் கொஞ்சம் தளர்ந்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் (40 ரன், 27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அதிர்ஷ்டவசமாக எஞ்சிய பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் அஸ்வின் ஒரு பவுண்டரியும், 2 சிக்சரும் விரட்டி தங்கள் அணி சவாலான ஸ்கோரை அடைவதற்கு உதவினார்.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அஸ்வின் 17 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் 183 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 23 ரன்களில் (17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து சஞ்சு சாம்சனும், ராகுல் திரிபாதியும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் ஆடிய விதம் அந்த அணிக்கு நம்பிக்கை அளிப்பது போல் இருந்தது. ஸ்கோர் 97 ரன்களை (11.4 ஓவர்) எட்டிய போது இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிரித்தார். அவரது பந்து வீச்சில் சாம்சன் (27 ரன்) போல்டு ஆனார்.

அதன் பிறகு பஞ்சாப் பவுலர்கள் கொடுத்த நெருக்கடியில் ராஜஸ்தான் திகைத்து போனது. திரிபாதி 50 ரன்னிலும் (45 பந்து, 4 பவுண்டரி), அறிமுக வீரர் டர்னர் ரன் ஏதுமின்றியும், ஜோப்ரா ஆர்ச்சர் 1 ரன்னிலும், கேப்டன் ரஹானே 26 ரன்னிலும் வீழ்ந்தனர். கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 23 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரில் அந்த அணி ஸ்ரேயாஸ் கோபாலின் (0) விக்கெட்டை பறிகொடுத்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தது.

20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 9-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது 5-வது வெற்றியாகும். ராஜஸ்தான் அணி சந்தித்த 6-வது தோல்வியாகும். இந்த சீசனில் 2-வது முறையாக பஞ்சாப்பிடம் தோற்று இருக்கிறது.

Tags: sports news