ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூர் வெற்றி

ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் எவின் லீவிஸ், ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் பவர்-பிளேயில் விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் குவித்தது. 8 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 71 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் எப்படியும் 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

9-வது ஓவரை கிறிஸ்டியன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய ஜெய்ஸ்வால் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 8.2 ஓவரில் 77 ரன்கள் எடுத்திருந்தது.

மறுமுனையில் எவின் லீவிஸ் அதிரடியால் 31 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 37 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 11.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் சஞ்சு சாம்சன் (19), லோம்ரோர் (3), லிவிங்ஸ்டன் (6), ராகுல் டெவாட்டியா (2) அடுத்தடுத்து ஆட்டமிழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன்வேகம் அப்படியே குறைந்தது. மிடில் மற்றும் டெத் ஓவர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் சிறப்பாக வீச ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே அடிக்க முடிந்தது. ஆர்.சி.பி. அணியில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டும் சஹல், ஷாபாஸ் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி. அணி பேட்டிங் செய்தது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 25 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த ஸ்ரீகர் பரத், மேக்ஸ்வெல் ஜோடி அபாரமாக விளையாடியது. ஸ்ரீகர் பரத் 35 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 30 பந்தில் அரைசதம் அடிக்க, டி வில்லியர்ஸ் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools