ஐபிஎல் தொடரின் கடைசி லீக் (56) ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சன்ரைசரஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்று என்ற வாழ்வா? சாவா? நிலையுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது.
அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இருப்பதுபோல் வார்னர் டாஸ் வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 4 ரன் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கினார். மறுமுனையில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்த நிலையில் சந்தீப் சர்மாவின் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.
3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மும்பை இந்தியன்ஸ் 11.1 ஓவரில் 81 ரன்கள் எடுத்திருந்தபோது சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் வந்த குருணால் பாண்ட்யா (0), சவுரப் திவாரி (1) அடுத்தடுத்து ஆட்டமிக்க மும்பை இந்தியன்ஸ் 12.1 ஓவரில் 82 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து திணறியது. இஷான் கிஷன் 30 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். பொல்லார்ட் அதிரடி காட்ட மும்பை அணி மீண்டும் வேகமெடுத்து 150 ரன்னை கடக்கும் வாய்ப்பை பெற்றது.
19-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த பொல்லார்ட் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து அடித்த பந்தில் க்ளீன் போல்டானார். பொல்லார்ட் 25 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 41 ரன்கள் அடித்தார். கடைசி 3 பந்தில் 3 ரன்கள் கிடைக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்துள்ளது.
பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணயின் டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சாளர்களால் இவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. பவர்பிளேயில் 56 ரன்கள் விளாசிய ஐதராபாத், 10 ஓவரில் 89 ரன்கள் எடுத்தது.
12-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி வார்னர் 35 பந்தில் அரைசதம் அடித்தார். சகா அதே ஓவரின் 4-வது பந்தில் சிங்கிள் எடு்து 34 பந்தில் அரைசதம் அடித்தார்.
ஐதராபாத் 15 ஓவரில் 137 ரன்னைத் தொட்டது. 18-வது ஓவரின் முதல் பந்தை வார்னர் பவுண்டரிக்கு விரட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17 பந்துகள் மீதமுள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. வார்னர் 58 பந்தில் 85 ரன்களும், சகா 45 பந்தில் 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.