Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பையிடம் படுதோல்வியடைந்த சென்னை

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட் (0), டு பிளிஸ்சிஸ் (1), அம்பதி ராயுடு (2), ஜெகதீசன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 3 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதை போல அதன்பின் விக்கெட் மளமளவென சரிந்தது. ஜடேஜா 7 ரன்னிலும், டோனி 16 ரன்னில் ஆட்டமிழக்க சென்னை 6.4 ஓவரில் 30 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

சாம் கர்ரன் தனிநபராக போராடி 47 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடிக்க சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் போல்ட் 4 ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா 2 விக்கெட்டும், ராகுல் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி காக், இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். இஷான் கிஷன் அதிரடி காட்ட, டி காக் நிதானமாக விளையாடினார்.

இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க, மும்பை இந்தியன்ஸ் 12.2 ஓவரிலேயே 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 37 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 68 ரன்களுடனும், குயின்டான் டி காக் 37 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.