ஐ.பி.எல். போட்டியின் 37-வது ஆட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிக பட்சமாக கிறிஸ் கெயில் 69 ரன்னும், மன்தீப் சிங் 30 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி அணி பந்து வீச்சாளர்கள் தரப்பில் சந்தீப் லமிச்சானே 3 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல் மற்றும் ரபடா ஆகியோர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, டெல்லி அணி 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியொர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது பிரித்வி ஷா 11 ரன்னில் அவுட்டானார். அடுத்து தவானுடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினர்.
தவான் அரை சதமடித்து 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 6 ரன்னில் வெளியேறினார். ஐங்கிராம் 19 ரன்னில் அவுட்டானார்.
பொறுப்புடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அசத்தினார். இறுதியில் டெல்லி அணி 19.4. ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 58 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.