Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் – பஞ்சாப்பை வீழ்த்தி மும்பை வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது ஆட்டம் நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி டாக், ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே காட்ரெல் வீசிய பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் குவிண்டன் டி காக் டக் அவுட் ஆனார்.

அடுத் வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இஷான் கிஷன் 28 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய பொல்லார்டு ரோகித் சர்மாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 45 பந்தில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ருத்ர தாண்டவம் ஆடியது. 17 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி ஹர்திக், பொல்லார்டு ஜோடியின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

20 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர் உள்பட 47 ரன்களுடன் பொல்லார்டும், 11 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்சர் உள்பட 30 ரன்களும் ஹர்திக் பாண்ட்யாவும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பஞ்சாப் தரப்பில் கட்ரோல், ஷமி, கௌதம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் கேப்டர் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

18 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கருண் நாயர் 3 பந்துகளை சந்தித்து குர்னால் பாண்ட்யா பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் மும்பை வீரர் ராகுல் சாஹர் பந்துவீச்சில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய நிக்கோலஸ் பூரன் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 44 ரன்கள் குவித்து பேட்டிசன் பந்துவீச்சில் வெளியேறினார். ஆனால், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

மும்பை தரப்பில் பேட்டிசன், பும்ரா, ராகுல் சாஹர் ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.