Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்! – சென்னை அணி 4வது முறையாக கோப்பையும் ருசிக்குமா?

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அணிகளில் முதன்மை வாய்ந்ததாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், தான் விளையாடிய அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. வேறு எந்த அணியும் இந்த முத்திரையை பதிக்கவில்லை. அந்த அளவுக்கு சூப்பர் கிங்ஸ் வலிமை பெற்ற அணியாக திகழ்கிறது.

இதில் 3 முறை ஐபிஎல் கோப்பையை (2010, 2011, 2018) வென்று இருக்கிறது. 4 தடவை 2-வது இடத்தை பிடித்து இருக்கிறது. அதாவது இறுதிப்போட்டிக்கு 7 முறை நுழைந்த ஒரே அணி என்ற சாதனையை சூப்பர் கிங்ஸ் பெற்று முத்திரை பதித்துள்ளது.

2008-ம் ஆண்டு நடந்த அறிமுக ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை இழந்தது. 2009-ம் ஆண்டு நடந்த 2-வது ஐபிஎல் போட்டியில் அரை இறுதியில் பெங்களூரிடம் தோற்றது. 2010-ம் ஆண்டு நடந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 22 ரன்னில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

2011-ம் ஆண்டு நடந்த போட்டியிலும் சென்னையின் ஆதிக்கம் நீடித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை இறுதிப்போட்டியில் 58 ரன்னில் வீழ்த்தி சென்னை அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. 2-வது தடவையாக ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது.

5-வது ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடியது. இறுதிப்போட்டியில் கொல்கத்தாவிடம் 5 விக்கெட்டில் தோற்று ‘ஹாட்ரிக்’ கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐபிஎல் போட்டியிலும் சூப்பர் கிங்ஸின் ஆதிக்கம் நீடித்தது. ‘லீக்’ சுற்றில் முதல் இடத்தை பிடித்த அந்த அணி ‘குவாலிபையர் 1’-ல் மும்பையை 48 ரன்னில் வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் 23 ரன்னில் தோற்று 3-வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை 2-வது முறையாக தவறவிட்டது.

2014 மற்றும் 2015-ம் ஐபிஎல் தொடர்களிலும் சூப்பர் கிங்ஸ் அபாரமாகவே ஆடியது. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தொடர்ந்து முன்னேறி முத்திரை பதித்தது. 2014-ல் ‘குவாலிபையர்-2’ ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் 24 ரன்னில் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

2015 போட்டியில் ‘லீக்’ சுற்றில் முதல் இடத்தை பிடித்தது. ‘குவாலிபையர்-1’-ல் மும்பையிடம் 25 ரன்னில் தோற்று, ‘குவாலிபையர்-2’-ல் பெங்களூரை வீழ்த்தி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் மும்பையிடம் மீண்டும் 41 ரன்னில் தோற்று பட்டத்தை இழந்தது. ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் காரணமாக 2016 மற்றும் 2017 போட்டிகளில் அந்த அணி விளையாட முடியாமல் போனது.

11-வது ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் 3 வீரர்களை ரூ.33 கோடிக்கு தக்க வைத்தது. அதாவது கடைசியாக விளையாடிய அணியில் இருந்த வீரர்களை தக்க வைத்தது. கேப்டன் டோனியை ரூ.15 கோடிக்கும், ரெய்னாவை ரூ.11 கோடிக்கும், ரவிந்திர ஜடேஜாவை ரூ.7 கோடிக்கும் தக்க வைத்தது. மீதியுள்ள வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

பிராவோ, டு பிளிசிஸ் ஆகியோரை ஏலத்தில் தக்க வைத்தது. வாட்சன், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட் புதிய வரவாக இருந்தது.

தடைக்கு பிறகு விளையாடிய சென்னை சூப்பர் கிங்சின் ஆட்டம் அதிரடியாகவே இருந்தது. ‘லீக்’ சுற்றில் 2-வது இடத்தை பிடித்து ‘பிளேஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது.

‘குவாலிபையர்1’ ஆட்டத்திலும் (25 ரன்), இறுதிப்போட்டியிலும் (8 விக்கெட்) ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் மும்பையுடன் தன்னை இணைத்து கொண்டது.

12-வது ஐபிஎல் போட்டியில் முத்திரை பதிக்கும் ஆர்வத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. ஐபிஎல் கோப்பையை 4-வது முறையாக வென்று புதிய சாதனை படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

ஐபிஎல்-லில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரெய்னா முதல் இடத்தில் உள்ளார். அவர் 176 ஆட்டத்தில் 4985 ரன் எடுத்துள்ளார். சராசரி 34.37 ஆகும். 1 சதமும், 35 அரை சதமும் அடங்கும். டோனி 4016 ரன்னுடன் 7-வது இடத்தில் உள்ளார். அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், டு பிளிசிஸ், முரளி விஜய் ஆகியோரும் போட்டியில் சிறப்பாக இருப்பார்கள்.

ஆல்ரவுண்டர் வரிசையில் பிராவோ, ஜடேஜா, வாட்சன் ஜொலிக்க கூடியவர்கள். பிராவோ 136 விக்கெட் வீழ்த்தி ஒட்டு மொத்த ஐபிஎல்-லில் 4-வது இடத்தில் உள்ளார். இதேபோல அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங் 134 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமே கேப்டன் டோனிதான். தனது ஆட்டத்திலும், கேப்டன் பதவியிலும் சிறப்பாக செயல்பட்டு அணியின் முதுகெலும்பாக உள்ளார். கடந்த முறை சேப்பாக்கத்தில் ஒரு ஆட்டம் மட்டுமே நடந்தது. தற்போது முழுமையாக போட்டிகள் நடக்கிறது.

இதனால் ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலம் சேர்க்கும். இதன்மூலம் சிஎஸ்கே புதிய வரலாறு படைக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *