Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் டைடில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் தேர்வு

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் குழுமமான டாடா கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து அதன் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை பெறுவதற்கும் நிறுவனங்களிடையே கடும் போட்டி நடைபெறும்.

ஐபிஎல் தொடங்கிய போது டி.எல்.எஃப், பெப்சி ஆகிய நிறுவனங்கள் டைட்டில் ஸ்பான்சராக இருந்தன. இதன்பின் 2016-ல் இருந்து சீனாவை சேர்ந்த விவோ நிறுவனம் ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்தது. இதற்காக அந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.440 கோடி பிசிசிஐ-க்கு செலுத்தி வந்தது.

இந்நிலையில் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லையின் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்தியா- சீனா வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் அந்த ஆண்டு மட்டும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் பொறுப்பில் இருந்து விவோ நீக்கப்பட்டது.

அதற்கு பதில் ரூ.222 கோடிக்கு டிரீம் 11 நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரானது. பின்னர் 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்-லில் விவோ நிறுவனம் மீண்டும் உரிமத்தை பெற்றது.

இந்நிலையில் தற்போது 2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் தேர்வாகியுள்ளது. இதனை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார்.