துபாயில் நடைபெற்ற ஐபிஎல் குவாலிபையர்-1-ல் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. டி காக் 25 பந்தில் 40 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 38 பந்தில் 51 ரன்களும், இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 30 பந்ததில் 55 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 14 பந்தில் 37 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. முதல் ஓவரை டிரென் போல்ட் வீசினார். 2-வது பந்திரில் பிரித்வி ஷாவையும், 5-வது பந்தில் ரகானேவையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.
அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் தவான் ஸ்டம்பை பறிகொடுத்து ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 12 ரன்னிலும், ரிஷப் பண்ட் 3 ரன்னிலும் வெளியேறினர். அத்துடன் டெல்லி அணியின் தோல்வி உறுதியானது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46 பந்தில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரது ஆட்டத்தாலும், அக்சார் பட்டேல் கடைசி வரை போராடி 42 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.